Tuesday 22 September 2015

காலம் கடந்த புலம்பல்



சேலை தலைப்பொதுக்கி 
முலை சுரந்த பாலூட்டி
தலை கோதி சீராட்டி
மலை போன்ற துயர் வரினும்
சளைக்காது துணை நின்று
இணை தேடும் பருவத்தே
தினையளவும் உன் நினைவற்று - மாறன்
கனையதனில் மதி மயங்கி
எனையே நான் மறந்திருக்க
பனை போலும் பொறுமையுடன்
சுனை போன்ற உன் அன்பாலே
நினைத்த என் காதலையே - வாழ்க்கை
துணையாக்கிய என் தாயே!
நினைவற்று நீ கிடக்க
உனைக்காண நான் வருகையிலே
கண்ணை. மூடிய உன் நீள்துயில் என்
வினைப்பயனோ?
உனையே நான் பே ணிடவே
எனையும் நீ மன்னித்து
என் மகளாய். வந்திடம்மா
எனையும் நீ ஏற்றிடம்மா !

என் ஆசை ஜன்னலே



நீ  என்  வீட்டின் ஜன்னல்.
என் மனம் கவர்ந்த தோழமை.
உன் வழியே நான்...
தென்றலை உணர்கிறேன்.
வெளியை தரிசிக்கிறேன்.
வானவில் ரசிக்கவும்
மழை கண்டு குதூகலிக்கவும் செய்கிறேன் !


உன்னருகமர்ந்து தேநீர் பருகவும்,
சமயத்தில் தலை சாயவும் ,
கண்ணயரவும் கூடும் .
நானறிவேன். நன்கு அறிவேன்.
உன்னால் புயல் உணர்த்திடவும்
புழுதிவாரி இறைத்திடவும் முடியுமென்று.
ஆனாலும்.... கதவிட்டு உன்னை அடைத்திடமாட்டேன்.
ஒன்றை நீயுணர்ந்து கொள்.
நீ எப்படியானாலும் என் வீட்டின்
நுழைுவாயிலாகமுடியாது. ஏனெனில்
உனக்கு கம்பிகள் இருக்கின்றன.

அம்மாவின் கைமணம்



வெய்யில்  பருவம் தொடங்கிவிட்டால்
அம்மாவும் தன் தயாரிப்பு வரிசையை ஆரம்பித்துவிடுவாள்
மணிதக்காளி வற்றல் மோர் மிளகாய் மாகாளி ஊறுகாய் மாவடு கூழ் வற்றல் கறி வடகம் கத்திரி வற்றல் என பட்டியல் நீளும் .
என்னதான் அப்பா சலித்துக்கொண்டாலும் அவளின்
கைப்பக்குவத்தின்  மீது அவருக்கு அலாதி பெருமை. 
பக்குவமாய் நறுக்கிய மாங்காயில்
எண்ணெயும் காரமும் உப்புமிட்டு
பதமான பக்குவம் வரவும் சாடியில்
அடைத்து பத்திரப்படுத்திய அம்மா
தானும் ஊறுகாயாகிப்போனாள்.
ஆம். அவள் தன் உடலை தானமாக ஈந்திருந்தாள்.
அவளின் கைமணத்தில் தயாரான
பண்டங்கள் யாவும் வருடம் முழுதும்
எம் நாவில் ருசித்துக்கொண்டிருக்கும்.
பருவங்கள் திரும்பும் பண்டங்கள் தீரும் ஆனால்
அம்மாவும் அவள் கைமணமும் ?

தாயும் சேயும்

சூரியக்கணவனின் சுட்டெரித்த 
பா ர்வையதில்  
மண்மகளிண் உயிர் வற்றியது கண்டு
முகிற் குழந்தை வடித்திட்ட கண்ணீரோ வான்மழையும் !
மகவதனின் ஈரந்தனில் நனைந்து
பூமித்தாயின் இதழோரம் விரிந்திட்ட
புன்னகையோ புல்வெளியும்!

என்னவனே




தனித்திருந்தேன்
      துணையாய் வந்தாய்
களைத்திருந்தே்ன்
.      உற்சாகம் தந்தாய்
பசித்திருந்தே்ன்
.       உணவளித்தாய்
துவண்டிருந்தேன்
.        தோள்கொடுத்தாய்
கனவுகள் கண்டேன்
.         நினைவுகளாக்கினாய்
காதல்க்கொண்டென்
.          மனைவியாய்  ஏற்றாய்
மோகம் கொண்டேன்
.           தாகம் தீர்த்தாய்
கரு சுமந்தேன்
.            எனையே சுமந்தாய்
வலியென்றென்
.             உயிர் துடித்தாய்
பெற்றெடுத்தேன்
.              பூரித்து நின்றாய்
மகளென்றேன் - இல்லை
.               தாய் என்றாய்.
அவள் வரவும்
.               என்னை ஏன் மறந்தாய்?



ஆதியே அய்யனே !



ஆதியாம் ஆதவனே !
கிழப்பருவமேதான் எய்தினையோ?
நீரிழிவு நோயுமேதான்
உன்னையுமே  தாக்கிற்றோ?
புவி ஈரமெல்லாம் உறுஞ்சுகிறாயே 
பாவம் பூமித்தாய் தவிக்கின்றாள்!
உன் தாகம் தீர்த்திடவே
பனிப்பாறைகளை நாடியேதான்
ஓடுகிறாள்.
உன் வேகம் தாளாது பிரிந்து அவள் வந்தமைக்கு
நீ தந்திடும் தண்டனையோ இச்செயலும் ?
பூமித்தாய் ஈன்றெடுத்தாள் மக்களினம் :
காத்திடவே தவிக்கின்றாள் தன் பிள்ளைகளை ;
உன் கருணை பார்வை அதுவன்றோ?
அவள் தவிப்பதனை ஆற்றிவிடும் அருமருந்து.

ஏமாற்றம்


                 ஏமாற்றம்
                ~~~~~~~~~~|~
மன்றாடுதலுக்கு  இரங்கிய என் தேவன்
காட்சி தந்தான் என் முன்னே
பாதாதி கேசம்வரை நோக்கிய என்
கண்கள் இமைக்கவும் மறந்தது
புன்னகைத்த எந்தையுமே
வரமென்ன வேண்டும் கேட்டிடென்றான்
நாளும் பேசிடவும் நினைத்தபோது
காட்சியுமென்றென்!
தந்த அவன், யாருக்கு என்றுமட்டும்
ஏனோ சொல்ல மறந்தான்.

Monday 21 September 2015

படர கோல் தேடும் கொடி



படர கோல் தேடும்  கொடி
சற்றே இளைப்பாற நிலைகொண்ட தேர்மீது பற்றி படர்ந்திட எத்தனிக்கையில்
வேரறுக்க நினைத்தால் என்னய்யா
நியாயம் ?
தேரின் கொடியொன்றை விட்டுச்செல்
கொடி வளர்ந்து செழிப்பாகும்
அது உனக்கு மகசூலையே
தந்திடும்..
ஒருபோதும் உன்னை ஆளுமை செய்யாது.
ஏனென்றால் அதன் தேவை ஊன்றுகோல் மட்டுமே.

சிவனே....


பஞ்சு திரியிட்டு
நெஞ்சுருக வேண்டினரே
தஞ்சமென்றே வந்தார்
உன்னை 
நஞ்சுண்ட ஈஸ்வரனே
கெஞ்சுதலை செவிமடுத்தே
அஞ்சுதலை போக்கிடுவாய்  யாம்
அஞ்சுகின்ற அரவந்தனை
நெஞ்சுமீதணிந்தவனே 
பஞ்சபூத வடிவினனே
கொஞ்சுமுகம் காட்டாயோ? பிஞ்சுமன
பக்தனையே.கொஞ்சமும் நீ
நோக்காயோ ?

ஊடல்


வஞ்சியவள்  உனை நோக்கி
கெஞ்சிடினில் மறைந்திடதோ
விஞ்சிய  உன். கோபமெல்லாம்?
கஞ்சிதனை பருகிடாமல் நீ இருக்க
அஞ்சியவள் நோக்குகையில்
கொஞ்சியவள் கரம் பற்றி
மிஞ்சிய உன் காதலையே
நெஞ்சினிலே புதைக்காமல் நீயுரைக்க
எஞ்சிடுமோ ஊடலும்தான் உம்மிடையே?

நீ.....

நீ என்பது என் கனவு
நீயானது என் கற்பனைகளின்
உயிர் பிம்பம
நீயென்பது மாயை
நீயென்பது என் வெற்றிட நிரப்பி
நீயாரென என்னுள் நான் தேடிட
அதனை அவ்விடம் நானுணரும்
தருணம்
நீயே  நானாய்
என்னுள் நீயாய் ......
சுபஸ்ரீ  முரளீதரன்

Monday 14 September 2015

அம்மா
**********************
அன்புள்ள அம்மா நீ
ஆக்கிவைத்த உன் கைமணத்தை
இலையதனில் பரிமாற
ஈக்களென பறந்து வந்தோம்
உன் சுகத்தை பேணாமல்
ஊண் உறக்கம் பாராமல்
எங்களின் வாழ்வதனில்
ஏற்றங்கள் பெறச் செய்தாய்
ஐம்பது அகவையை கடந்திட்டும்
ஒருநாளும் எம்முன்னே
ஓய்ந்ததில்லை  ஒருகணமும்
ஔடதமும்  கண்டதில்லை
 அஃ தாமே என் அன்னை

வலைப்பதிவர் விழா

புதுகையில் கோலாகலமான திருவிழா....


வலைப்பதிவர்கள் குடும்பத்துடன் சந்திக்க இருக்கும் விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.....